காலத்தால் நிச்சயம் அழியாது கௌசிகா நதி…3(தொடர்ச்சி )  
நதியை மறந்தோமா….
அருணகிரிநாதர் பாடிய நதி..
 
 
முருகன் இருக்கும் தளங்களுக்கு எல்லாம் சென்று பாடியவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதர். இவர் எழுதிய நூல் திருப்புகழ். இந்நூலில் குருடிமலை முருகனைப் பற்றி பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இத்தலம் வைப்புத்தலமாக விளங்குகிறது. குருடி மலையில் இருக்கும் இறைவனாகிய முருகனை பாடுகிற போது இங்கு மதுரம் எனும் நதி ஓடியதாக இவர் திருப்புகழில் குறிப்பிடுகிறார். இந்த மதுர நதியே கௌசிகா நதியின் தொடக்கமாகும். இந்த நதி வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய காட்சியை இப்பாடலில் குறிப்பிட்டிருக்கிறார்.
இம்மலையின் மேற்குப் பக்கத்தில் இருக்கும் இந்தக் கோயிலுக்கு கோவையில் மேற்கே உள்ள சின்ன தடாகத்திலிருந்து செல்வதற்கு வழி இருப்பதாக இத்தல புராணக் கோயிலைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்ட பேராசிரியர் இராமஇராமசோழன் என்பவர் குறிப்பிடுகிறார். இக்கோயிலுக்குக் கிழக்குப் பக்கத்தில் இருந்து செல்வதற்கு வழி இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறினாலும் வனவிலங்குகளின் அச்சுறுத்தல் மற்றும் வன அதிகாரிகளின் கட்டுப்பாடுகளால் எங்களது ஆய்வு பணி அங்குசென்று ஆய்வதற்கு உகந்ததாக அமையவில்லை. பிறகு கௌசிகா நதி வழியே கிழக்கு நோக்கிப் புறப்பட்டு எங்களது ஆய்வுப் பணியை தொடங்கினோம்.
 
பெரும் பள்ளத்தில் ஓடிய நதி…
சுமார் பதினைந்து அடி  அகலத்தில் குருடிமலையில் சிற்றோடை யாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிய இந்நதி சற்று தூரத்தில் 75 அடி ஆழமான பள்ளத்தில் ஓடி இருப்பதற்கான தடயங்களைக் காணமுடிந்தது.
பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…
இதையடுத்து, பழங்குடி மக்கள் வாழ்ந்ததற்கான சிறுதெய்வக் கோயில்களும், கற்கால மக்கள் வழிபடுவதற்கான கல்வழி மாடுகளும் இடைக்காலத்தில் ஓய்வெடுத்துக் சென்றதற்கான சுமைதாங்கிக் கற்களும் இந்த நதிக்கரையிலே காணமுடிந்தது. இவைகளெல்லாம் இப்பகுதி மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களாக  அமைகின்றன.
நதி வளம்…
 
கௌசிகா நதி ஓடும் பகுதிகளிலே காணப்படும் இடப்பெயர்கள் இந்நதியின் வளத்துக்கு சான்றுகளாய் அமைகின்றன. வண் வண்ணத்தன்கரை, இடிகரை (கரை என்பது பள்ளத்தில் உள்ள மண்ணை எடுத்து மேடாக்கிய நதிக்கரையை குறிக்கும்) என்ற பெயர்கள், தாளமடல் ஓடை, தன்னாசி ஓடை,செம்பள்ளம்  (ஓடை என்பது நீர் ஓடும் சிறிய பகுதிகளை குறிக்கும்) என்ற பெயர்கள், அக்ரகார சாமகுளம், சர்க்கார் சாமக்குளம்(சாமகுளம் என்பது சாம்பல் மேடைக் குறிக்கும். சாம்பல் மேடு உள்ள பகுதி கால்நடைச் சமுதாய மக்கள் வாழ்ந்ததற்கான தடயம் ஆகும்) ஆகிய பெயர்கள் கௌசிகா நதியின் வளத்தினால் உருவாகிய பெயர்கள் எனக் கண்டறிய முடிந்தது. இவ்வழியாக வளம் செழித்து ஓடிய இந்த நதி கோவில்பாளையம் என்ற இடத்தில் 85 அடி அகலத்தில் பாலம் கட்டப்பட்ட இடத்தில் ஓடியதற்கான தடயங்களை காணமுடிந்தது.
 
கௌசிகா நதியால் இவ்வூர் பண்டைய நாளில் வளம் செழித்து காணப்பட்டதற்கான பல தடையங்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. இவ்விடத்தில் ஓடிய நதியில் கிழக்குக்கரையோரத்தில் “சாம்பல் மேடு”என்று அழைக்கப்படுகின்ற ஒரு பகுதியை அடைந்து அங்கு எங்களது மேற்பரப்பு ஆய்வு பணியைத் தொடங்கினோம்
 
நதியை மறந்தோமா…
தொன்மை செய்திகள்…(Myth)….
 
 
இந்நதி பற்றிய தேடலில் ஈடுபட்டபோது புராணத் தொன்மைக் கதைகளும் வரலாற்று தொல்பொருள் சான்றுகளும் இடைக்காலத்து கல்வெட்டுகளும் தல புராணங்கள் கிடைக்கப்பெற்றன. இதன் அடிப்படையில் தொலைந்துபோன கௌவுசிகா நதியை தேடுகின்ற முயற்சியில் ஈடுபட்டு ஆராயத் தொடங்கினோம்.

கௌவுசிக முனிவரும் கௌசிகா நதியும்…

கௌசிகா நதியின் பெயர் விசுவாமித்திரருக்குரிய பெயராக அமைகிறது. விசுவாமித்திரரது ஒரு பெயர் கௌசிகா முனிவர் இவருடைய பெயரில் அமைந்ததுதான் கௌசிகா நதி. இதனைப்பற்றி “கௌசைத்தலபுராணம்” கூறுகிறது. இந்நூலை எழுதியவர் கோவை கௌமார மடத்தை நிர்வகித்து வந்த தவத்திரு கந்தசாமி சுவாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிரவை ஆதீனத்தின் இரண்டாம் பட்டமாக அருட் செங்கோல் செலுத்தியவர். கொங்குநாட்டு புலவர்களில் அதிகப் பாடல்கள் பாடிய புலவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. 1936ல் முதல் பதிப்பாக வெளிவந்த இந்த நூல் செவிவழிச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு வெளிவந்த முதல் நூல்.

கௌசை தலபுராணத்தில் கௌசிகா நதி…

சிவபெருமான் அருளால் காசியிலிருந்து கொங்குநாட்டுப் பேரூர் உள்ள பட்டீஸ்வரரை தரிசிக்க வருகிறார் விசுவாமித்திரர். அப்போது கோவில்பாளையத்தில்(கோவையில் இருந்து வடகிழக்குப் பகுதியில் 15 கிலோமீட்டர் தூரத்தில் இவ்வூர் உள்ளது) உள்ள காலகாலேசுவரர் திருவடிவம் அவருக்கு காட்சியளிக்க பிறகு இத்தளத்திற்கு வந்து இந்த நதியில் நீராடி காலகாலேசுவரரை வழிபடுகிறார். அப்போது மக்கள் நலம் கருதி வேள்வி செய்ய இறைவன் அவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். கௌசிகா முனிவராகிய விசுவாமித்திரர் இங்கு ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கு கௌசிகா நதி என்றும் இவ்வூருக்குக் கௌசிகபுரி என்றும் தமது பெயரால் அழைக்கப்பட வேண்டும், இந்த நதி வாழ்மக்கள் வளமுடன் வாழ வேண்டும் என்று கேட்க அவ்வாறே இறைவன் அருள் செய்ததாக இத்தல புராணம் கூறுகிறது.

வழக்காற்றில் குருமரிஷி மலை…

கௌசிகா நதியின் தொடக்கத்தை காணும் முயற்சியில் நாங்கள் எங்கள் பயணத்தை தொடங்கினோம். இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 10 அடி அகலத்தில் பழைய சஞ்சீவி பண்ணாரி மாரியம்மன் கோயில் என்ற இடத்தில் மலையை விட்டு ஓடி இந்நதி வருவதற்கான முகத்துவாரத்தை கண்டறிந்தோம். இந்நதி தோற்றம் பெற்ற இம்மலை “குருடிமலை” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ஒரு காலத்தில் மக்கள் இம்மலையை கூறும் அரிசி மழை என்று அழைக்கப்பட்டு வந்ததாகச் செவிவழிச் செய்தி மூலம் அறிய முடிந்தது. ‘குருமரிஷிமலை’ என்பதே குருடிமலையாக காலப்போக்கில் மக்கள் வழக்காற்றில் மாறி இருக்கிறது.

குரு ரிஷி என்பது விசுவாமித்திரர் அது பெயர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. விசுவாமித்திரரது பெயர்களாகிய  “குருரிஷி” மற்றும்  “கௌசிகா”என்ற பெயர்கள் நதி தோற்றம் பெற்ற மலைக்கும், இந்த நதிக்கும் வழங்கப்பட்டு அழைக்கப்பட்டு வந்திருப்பதால் இந்நதி தொன்மை கதைகளை பெற்று பழம் சிறப்புடையதாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது..
 
கட்டுரையாளர் :முனைவர் ச.இரவி
இணைப்பேராசிரியர்,தமிழ்த்துறை,
கல்வெட்டியல்பட்டயப்படிப்பு பொறுப்பாசிரியர்.
 பூ.சா.கோ கலை மற்றும்அறிவியல் கல்லூரி மாணவர்கள்
உதவி:கௌசிகா நதி செல்வராஜ்