காலத்தால் நிச்சயம் அழியாது கௌசிகா நதி …(தொடர்ச்சி 5)
கௌசிகா நதிக்கரை நாகரிகம் 
சிதைவுற்ற மட்கலங்கள் (Dameged Potteries )…
இந்த இடத்தில(கோவில்பாளையம்,சாம்பல் மேடு)மற்றும் (சாலையூர் ,நாரணபுரம் கிராமம் ,அன்னுர் தாலுக்கா )பகுதிகளில்  வரலாற்றுக் காலத்துச் சுடுமண் ஓடுகள் ஏராளமாக சேகரிக்கப்பட்டன .தொல்லியலுக்கு அதிகமான உறுதியான ஆதாரங்களை தருவது  இச்சுடுமண் கலங்களே .பண்டைய காலமக்கள் பயன்படுத்திய சுடுமண்கலங்கள் சிதைவுகளுக்கு உட்பட்ட நிலையில் அதிக வேலைப்பாடுகளுடன் (designed )கூடியதாக இருப்பதை கண்டறியப்பட்டன .
 
மட்கலங்களில் வேலைப்பாடுகளும் வண்ணப்பூச்சுகளும்(Designed and Painted  Ware )
நகபதிவுகளுடன் கூடிய வேலைப்பாடுகள் ,விரல் பதிவுகளைப் பயன்படுத்திய அலங்கார வேலைப்பாடுகள் ,கைகளைப்பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அழகிய மட்கலங்களின் பதிவுகள் போன்றன எங்கள் சேகரிப்பில் கிடைக்கப்பெற்றன .இதனை ஆய்வுக்கு உட்படுத்தியபோது தடித்தும் மெல்லியதுமான கருப்பு, சிவப்பு,செம்பழுப்பு,கருங்சிவப்பு நிறங்களில் ஓடுகள் சேகரிக்கப்பட்டன .  இவற்றில் வண்ணப்பூச்சு பூசப்பட்ட ஓடுகள் அழகுபடுத்தப்பட்ட வண்ண கோட்டுப்பூச்சுகள் கிடைத்துள்ளன .சாம்பல் நிற ஓடுகள் அதிக அளவில் கிடைத்திருப்பது காலத்தை முன்னோக்கி செல்ல வைக்கின்றன .இதனால் அதிக அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய மட்பாண்ட ஓடுகளை பயன்படுத்திய இம்மக்களது நாகரீக பண்பாடு உயர்ந்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது .இவை அனைத்தும் சக்கரங்களை கொண்டு தயாரிக்கப்பட்டு இருக்கின்றன .மட்பாண்ட தயாரிப்புக்கலையில் இங்கு வசித்த மக்கள் தேர்ச்சி பெற்றிருந்ததையே இச்சான்றுகள் காட்டுகிறது .அழகுக் கலைகளாக மட்பாண்டக் கலையை வனைதலிலே(Decorated Pots Herds) தங்கள் கைவண்ணத்தைக் காட்டி இருப்பதைப் பார்க்கின்றபோது பண்டைய பண்பாட்டு நாகரிகத்தில் இப்பகுதி மக்கள் உன்னத நிலையில் இருந்திருப்பதை அறிய முடிந்தது.
இதனைப் பற்றிக் கருத்து தெரிவித்த பேராசிரியர் டாக்டர் இராஜன் அவர்கள் வரலாற்றுக் காலத்தைய மட்பாண்டச் சில்லுகள் என்று குறிப்பிடுகிறார். இவர் கொடுமணல் அகழ்வாய்வை மேற்கொண்டவர் என்பதும் உலகத் தொல்லியல் வல்லுநர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கவை.
குறியீட்டு நாகரிகம்....
இவ்விடங்களிலே தொடர்ந்து நடத்தப்பெற்ற மேற்பரப்பாய்விலே குறியீடு பொறிக்கப்பட்ட மட்பாண்டத்தடயம்(Graffiti Pots Herds) ஒன்று எங்களுக்குக் கிடைத்தது.இக்குறியீடு எங்களது சேகரிப்பில் அரிய ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஒரு புள்ளியில் இருந்து நான்கு கோடுகளாகப் பரவி கீழ்நோக்கிச் செல்லுகின்ற விதத்தில் இக்குறியீடு அமைந்திருக்கிறது. 
 
குறியீடுகள் பொதுவாக எழுத்துத் தோற்றத்திற்கு முற்பட்டது. குறிப்பாக நமது தொல்தமிழ் எழுத்தாகிய தமிழ் பிராமி 2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வரலாற்றுச் சிறப்புடையது என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.இத்தகைய தமிழ் பிராமி எழுத்துகள் குறியீடுகளின் (Graffiti Marks) வளர்ச்சியாகத் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக டாக்டர் ராஜன் இக்கருத்தினை அண்மைக் காலமாக உறுதிப்படுத்தி வருகிறார்.
 
குறியீடுகள் எழுத்துத் தோற்றத்தின் முன் பொருள் விளங்கிக் கொள்ளுகின்ற விதத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன என்பது சிந்துசமவெளிக் குறியீட்டு எழுத்துகள் மூலம் நாம் அறிந்து கொண்ட உண்மை.கௌசிகாநதிக்கரையில் உள்ள கோவில்பாளையத்தில்  இவ்வூரில் கிடைத்த இக்குறியீட்டை மக்கள் எவ்வாறு பொருள் கொண்டனர் என உறுதி செய்யமுடியவில்லை என்றாலும் இக்குறியீடு இனக்குழு மக்கள் தங்களுடைய அடையாளத்திற்கான சின்னமாகக் கருதியிருக்கின்றனர் எனக் கூற முடியும். இந்த அடிப்படையில் இங்கு வசித்த மக்கள் வரலாற்றுக்கால அல்லது அதற்கு முன் வாழ்ந்த மக்கள் என உறுதியாகக் கூறமுடிகிறது.
நெசவுத் தொழில்:
கௌசிகநதிநீர்ப் பாசனத்தைப் பயன்படுத்திப் பருத்தி போன்ற பயிர்த்தொழிலே இந்நதிக்கரை நாகரிக மக்கள் ஈடுபட்டிருக்க வேண்டும். இங்கு கிடைத்திருக்கின்ற வழுவழுப்பான வட்டத் தேப்புக்கற்கள் இதற்குச் சான்று பகர்கின்றன.
 
நூலின் சொரசொரப்பைத் தேய்த்து வழுவழுப்பாக்கி அழகுபடுத்தியதற்கு இத்தேப்புக் கல்லையே இக்கால மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். எனவே நெசவுத் தொழிலில் இம்மக்கள் தேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர் எனக் கூறமுடியும். 
இரும்புத்தொழில்…
இரும்பைப் பயன்படுத்திய காலமே வேளாண்மைச் சமுதாயக் காலமாகக் கருதப்படுகிறது. இந்நாகரிக மக்கள் இரும்பை உருவாக்கியதற்கான இரும்பு உலைகளையும், சுடுமண் குழாய்களின் எச்சங்களையும்;,  இரும்புக் கசடுகளையும் இரும்புக் கருவிகளின் எச்சங்களையும்(Iron Objects) ஆங்காங்கே கண்டறிய முடிந்தன.இவை வேளாண் கருவிகள் மற்றும் போர் ஆயுதங்கள் தயாரிப்பில் தங்களை முழுமையாக இக்கால மக்கள் ஈடுபடுத்தி இருக்க வேண்டும். இரும்பைக் கண்டறிந்து பயன்படுத்தி இருக்கின்ற தன்மையை நோக்க இரும்புத் தொழில் நுட்பக் கலையில் இவர்களுடைய தேர்ச்சியைக் காணமுடிகிறது.
ஆபரணத் தொழில்:
 
ஆபரணத் தயாரிப்புக் கலையில் இம்மக்கள் சிறந்து விளங்கி இருக்கின்றனர் என்பதற்கு ‘அகேட்’ என்ற ஒருவகைக் கல்மணியையும் ‘குவார்ட்ஸ்’ என்ற வகை பளிங்குக் கல் மணிகளையும் பயன்படுத்தி இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. ஆபரணங்கள் தயாரிக்க உதவும் அகேட் வகையைச் சேர்ந்த மூலக்கல் (Raw meterial ) ஒன்று (வெண்மை நிறத்தில்) வழுவழுப்போடு உருண்டு திரண்ட வடிவில் அறுத்தெடுக்கப்பட்ட நிலையில் கிடைத்திருக்கிறது. மணிகள் செய்வதற்காக நேர்த்தியாக வெட்டி அறுக்கப்பட்ட நிலையில் தூய்மையான தெளிந்த நிலையில் பளிங்குக்கல் எச்சங்களாகக் கிடைத்துள்ளன. கிடைத்த இடம் தொழில்கூடப் பகுதியாக இருக்கலாம். இப்பகுதியில்தான் இரும்பு உருக்கும் தொழில் நடந்ததற்கான தடயங்களும் கிடைத்திருக்கின்றன.
கண்டறிந்த உண்மை
கௌசிகா நதிச் செழிப்பால் கௌசிகா நதிப்பண்பாட்டு மக்கள் கால்நடைச் சமுதாயத்தையடுத்து வேளாண்மை சமுதாயத்திலும் மிகச் சிறந்த நாகரிகப் பண்பாடுடையவர்களாக இருந்திருப்பதை அறியமுடிகின்றன. 
 
தொடக்கத்தில் நாடோடி இனக் குழுக்களாக கால்நடைச் சமுதாய வளர்ச்சியினூடே கௌசிகநதிச் செழிப்பால் வேளாண்மை செய்யும் மக்களாக நிலையான குடியிருப்பைக் கோவில்பாளையம் பகுதிகளிலே அமைத்துக் கொண்டு வாழ்ந்த  வரலாற்றுக் காலத்து மக்கள் பின்பு மட்பாண்டத் தயாரிப்புக் கலையிலும் ஆடை நெய்தல் கலையிலும், இரும்புத் தயாரிப்புக் கலையிலும் அணிகலன்கள் தயாரிப்பு கலைகளிலும் தேர்ச்சியுற்று கௌசிக நதிப்பண்பாட்டிற்கு வளம் சேர்த்திருக்கின்றனர் என்பதையே மேற்கண்ட தொல்லியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
இவ்வாறு கௌசிக நதிக்கரையில் வரலாற்றுக் காலத்திலிருந்தே மக்கள் வாழ்ந்து வந்ததற்கான தடையங்கள் பலவற்றைப் பூ.சா.கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கல்வெட்டுப் பட்டையப் படிப்பு மாணவர்கள் கண்டறிந்து வருகின்றனர். இதனால் மேலும் பல தடையங்கள் கிடைத்து வருகின்ற நிலையில் புதிய புதிய வரலாற்றுத் தகவல்கள் இனி வரும் காலங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். 
 
கால்நடைச் சமுதாய பண்பாடு.
 
சாம்பல் மேடு உள்ள பகுதி உலகம் முழுவதும் 5000 ஆண்டு பழமை உடையதாக பார்க்கப்படுகிறது. சாம்பல் மேடு கால்நடைச் சமுதாயத்து மக்கள் வாழ்ந்ததற்கான அறிகுறியாக தொல்லியலாளர்களால் பார்க்கப்படுகிறது.
கால்நடைகளை மேய்க்கும் தொழில் பிரதானமாக இருந்த காலத்தில் கால்நடை மேய்ச்சலுக்கான புல்வெளி களைத் தேடி இச்சமூக மக்கள் நாடோடிகளாக அலைந்து திரிந்தார்கள். புல் இருக்கும் வரை அவ்விடத்தில் தங்கியிருந்துவிட்டு புல் தீர்ந்தவுடன் அடுத்த நீர்நிலை உள்ள புல்வெளிகளை தேடி அங்கு சில நாட்கள் தங்குவர். அப்படி செல்கிறபோது குவித்து வைக்கப்பட்ட மாட்டுச்சாணம் கொளுத்திவிட்டு இச்சமூக மக்கள் செல்வர். இச்சமூக மக்கள் கொளுத்தப்படும் தீயின் மீது மாடுகளை ஓட்டுவார். மக்களும் நடந்து செல்வர். இந்நிகழ்வின் எச்சம் தான் கோயில் விழாக்களின் போது நடத்தப்படுகின்ற “தீமிதி விழா” அல்லது “குண்டம் விழா எனப்படும் விழாக்கள். இந்த நிகழ்வுகளால் அச்சமுதாய மக்கள் மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் நோய் தாக்காது என்று நம்பினர். இதனால் பிரேசர் என்ற அறிஞர் மக்கள் செல்வம் பெறுக இவ்விழா நடத்தப்படுவதாகக் கூறுகிறார். பண்டைய மக்கள் கொடுத்து விட்டுச் சென்ற சான மேடு  பின்னர் சாம்பல் மேடானது. கௌசிகா நதி வழித்தடத்தில் இருக்கும் அக்ரகார சாமகுளமும் ச,சாமகுளமும் இந்த சாம்பல் மேட்டையே குறிக்கும். கௌசிகா நதி வழித்தடத்தில் அமைந்திருக்கும் கோவில்பாளையத்தில் இத்தகைய சாம்பல் மேடுகளை காணமுடிகின்றது. இதனை இவ்வூரார் மக்கள் திருநீற்று மேடு என்றும் பூதி மேடு என்றும் நத்தமேடு என்றும் கூறிவருவதைக் காணமுடிந்தது.
 
இந்த சாம்பல் மேட்டுப் பகுதியை மேற்பரப்பு ஆய்வு செய்தபோது கால்நடைச் சமுதாயத்து இனக்குழு மக்கள் இப்பகுதியில் வாழ்ந்து இருப்பது உறுதியானது. கிடைக்கும் கால்நடை மற்றும் மனித எலும்புகளின் எச்சங்கள் இவ்வரலாற்றை உறுதிப்படுத்துகின்றன. இப்பகுதி பேரழிவுக்கு உள்ளாகி இருப்பதை இறுகிய மண்மேடு பகுதியில் கிடைக்கின்ற மனித மற்றும் விலங்குகளின் சிதைந்த பகுதிகள் சான்றுகளாகின்றன. கௌசிகா நதியின் காட்டற்று வெள்ளத்தில் இந்நதி பண்பாடு நாகரீகம் அழிவுக்கு  உள்ளாகி இருக்க வேண்டும். தற்போது உள்ள கோயில்பாளையம் அதன்பின் சற்று கிழக்குப் பகுதிக்கு இடப்பெயர்வு ஆகியிருக்கிறது.
இந்தச் சாம்பல் மேட்டுப் பகுதிகளில் இருந்து தற்போது இருக்கிற காலகாலேஸ்வரர் கோயில் அமைந்துள்ள கௌசிகா நதிக்கரையோரமே நடக்கும் செய்த ஆய்வில் பண்டைய மக்களின் வசிப்பிடம் இருந்திருப்பதற்கான தடயங்கள் ஏராளமாக எங்களுக்குக் கிடைத்துள்ளன.
 
கௌசிகா நதிக்கரை நாகரிகம்…
 
உலகின் சிறப்பான நாகரீகங்கள் எல்லாம் ஆற்றங்கரைகளில் தான் நடந்திருக்கின்றன. மெசபடோமியா, பாபிலோன், சிந்து சமவெளி நாகரிகங்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
இதுபோன்றுதான் கோவில்பாளையமும் ஒரு காலத்தில் வளம் பெற்ற நாகரிகப் பண்பாட்டை உடையதாக இருக்கிறது என்பதற்கு முன்பு ஓடிய கௌசிகா நதியின் கிழக்குக் கரையில் அதாவது இப்போது இருக்கின்ற காலகாலேஸ்வரர் கோயில் பின்னால் பின்பக்க கரையிலே எண்ணற்ற தடயங்கள் குறிப்பாக மேற்பரப்பு ஆய்வுகளில் கண்டறியப்பட்டன. இவை குடியிருப்புப் பகுதியாகக் கண்டறியப்பட்டன.(HabitationSite)

கௌசிகா நதிக்கரை நாகரிகம்…(தொடரும் )…
கட்டுரை :முனைவர் ச.இரவி,தொல்லியல் ஆய்வாளர் 
இணைப்பேராசிரியர்,தமிழ்த்துறை,
பூ.சா.கோ. கல்வெட்டியல்பட்டயப்படிப்பு கல்லூரி மாணவர்கள்
உடன் :கௌசிகா நதி செல்வராஜ்
www.kousikanathi.com